Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-72


குறள் 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

தம்பி.. தலைவர் எம்புட்டுத்தான் துருவித் துருவி கேட்டாலும், பயன் உள்ள தகவல்களை மட்டுந்தான் அவர்கிட்ட சொல்லணும். பலன் இல்லாதது எதையுஞ் சொல்லித் தொலைச்சிறப்புடாது தம்பி. 

குறள் 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

தலைவனா? அவன்லாம், எனக்கு பொறவு வந்தவன்டே. எனக்கு சொந்தக்காரன் தான். இப்படில்லாஞ்  சொல்லி தலைவனை இளக்காரமா பேசக் கூடாது. தலைவர் பதவிக்குண்டான மரியாதையெல்லாம் சரியாக கொடுக்கணுன் டே. 

குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

தம்பி.. நாம தான் தலைவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் ஆச்சே.. நம்ம எது செஞ்சாலும், அவரு ஒண்ணும் நெனைக்க மாட்டர் ங்கிற நெனைப்புல, தலைவருக்கு பிடிக்காத எதையும், கூறு உள்ளவன் எவனும் செய்ய மாட்டான்.

குறள் 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
மருமவன.. ஒருத்தனுக்கு தலைவர் ரொம்ப காலமா பழக்கமா இருக்கலாம். அந்த கோதாவுல, பண்பு இல்லாத செயல்களை அவஞ் செஞ்சாமுன்னா, அதுனால அவனுக்கு கெடுதல்தான் வரும் மருமவன. 

குறள் 701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

மாப்ள.. ஒருத்தன் எதும் பேசாம இருக்கும்போதே, மொகத்தைப் பாத்தே, அவன் என்ன நெனைய்க்காங்கிறதை தெரிஞ்சிக்கிடுதவன் இருக்காமுல்லா.. அவன் இந்த ஒலகத்துக்கே ஒரு அணிகலன் மாதிரி மாப்ள. 
(தொடரும்)



 


Post a Comment

0 Comments