(லவ் & சஸ்பென்ஸ் - சிறுகதை)
ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.
சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.
என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!
”எழுந்திருங்க” என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.
”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”
”ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?”
”கிடையாது.”
டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்” என்று கொடுத்தான்.
”என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.
”தேங்க்ஸ் மஞ்சு.”
”உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே.”
”மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?”
”எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”
”அவருக்கென்ன… வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”
சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.
”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.”
”ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”
டெலிபோனை வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.
”மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?”
”சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”
அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.
”கையெடுங்க. சொல்றேன்.”
”எடுத்தாச்சு.”
”அந்தக் கை.”
”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”
”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”
”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.
”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”
”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.”
”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.”
இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.
பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.
நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.
சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.
”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?”
”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”
”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”
”கோயிலுக்குப் போயாகணும்.”
”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”
”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”
”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.”
”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”
”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”
புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.
”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”
”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.
பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.
”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”
”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”
மாருதியில் ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.
”தெரியும், சொல்ல வேண்டாம்.”
”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”
”சே, புத்தி போறதே!”
ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”
அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.
கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே”
”தேங்க்யூ கர்னல்.”
”இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”
”தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.
”தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?”
”கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.
கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.
”சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”
”தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.”
”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.
அம்மா தனியாகக் கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.
”ஆமாம்மா.”
”எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”
அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?” என்றார்.
”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”
”எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.”
”அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.
ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.
சத்தீஷ் திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?” என்றான்.
”எங்கேயாவது!”
”சரி லெட்ஸ் கோ டு ‘எங்கேயாவது’….”
ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.
ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.
மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.
”பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.”
‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,
”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”
”படிங்க.”
”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”
பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!
இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.
பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…
”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”
செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.
மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.
எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.
நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பதமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.
கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?
ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…
வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.
”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”
கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!
சுஜாதா
adrasaka
0 Comments