கானகத்துக் காதல் ஜோடி பெரியகல்லை விட்டும் சற்றுத்
தூரம் நகர்ந்து, வெரளி மரத்தைத் தாண்டி கித்துள் மரமொன்றின் அருகே வந்து கொண்டிருந்தபோது, மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒரு முரட்டு மனிதன் திடீரென அவர்கள் முன் பாய்ந்தான்!
அதிர்ச்சியில் ரெங்க்மா செரோக்கியை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்! கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அவனும் அவளை இறுக்கி அணைத்தபடி, முரட்டு மனிதனை வெறித்தனமாகப் பார்த்தான்.
அந்த மனிதனின் முகத்தைக் கண்ட ரெங்க்மா,
“ஆ... இது அவனேதான்…! என் உறவுக்காரன்!”
தான் பிறந்தவேளை தன்னை இவனுக்குக் கட்டி வைப்பதாக தனது பெற்றோர் இவனது பெற்றோரிடம் வாக்குறுதி அளித்ததாகவும், வளர்ந்து வாலிபனானதும் இவன் “குவாரணி” இனத்தவர் தொடர்பால் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் மொத்த புரோகோனிஷ் கிராமமும் இவனை வெறுத்தொதுக்கும் நிலைக்கு ஆளான செய்தியை ஒரு நொடிக்குள் செரோக்கியிடம் கூறி முடித்தாள் ரெங்க்மா!
கிராமத்தின் நுழைவுப் பகுதியில் ஒதுக்குப் புறமாக வாழ்ந்து வந்த செரோக்கியின் குடும்பத்திற்கு இந்தச் செய்தி போய்ச் சேராதது ஏன் என்பது ரெங்க்மாவுக்குப் புரியாத புதிராக இருந்தது!
“யாரிவன்…? எங்கு இவனோடு சுத்துறே…?” அவன் காம்பீரக் குரலில் முரட்டுத்தனமாக கர்ஜித்துவிட்டு, செரோக்கியின் இடையை இறுக்கிப் பிடித்திருந்த ரெங்க்மாவைப் பிரித்து இழுத்தெடுக்க முயன்றான்!
செரோக்கி விடவில்லை! அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டே தனது முழுப்பலத்தையும் திரட்டி அந்த முரட்டு மனிதனை உதைத்துத் தள்ளிவிட்டான்.
இலைகள் அவிந்தும் மிருகங்களின் எச்சங்கள் நிறைந்தும் காணப்பட்ட குட்டையொன்றில் அந்த மனிதமலை போய் விழுந்த வேகத்தில், நாறிப் போன சகதிகள் இவர்கள் மீது தெறித்ததில், அணிந்திருந்த அங்கவஸ்திகயோடு சேர்த்து இவர்களது உடம்பு முழுவதும் ஈரமடைந்து சகிக்க முடியாத நாற்றமெடுத்தது!
குட்டையில் விழுந்தவனை அப்படியே விட்டுவிட்டு, தங்களைக் கழுவிக் கொள்வதற்காக நீர் நிலை தேடி விரைந்தார்கள்.
மாற்று வழியொன்றில் நெடுந்தூரம் நடந்த பின்னர், “கரோனி” நதியிலிருந்து ஊற்றெடுத்துப்பாயும் அருவியொன்றை அவர்கள் கண்டார்கள்.
பாசி படிந்திருந்த கற்களின் மீது வழுக்கிவிழுந்து விடாமல், பத்திரமாக ரெங்க்மாவை ஏற்றிவிட்டு, அருவியில் கற்சுவர் ஊடாகக் கொட்டிக்கொண்டிருக்கும் நீரின்மேல் சாய்ந்தபடியே அவள் தன் உடம்பு முழுவதையும் நனைத்துச் சுத்தம் செய்துகொள்ள உதவினான் செரோக்கி! சகதிகள் பட்டு நனைந்திருந்த அவர்களது அங்கவஸ்திகள் மறுபடி உபயோகிக்க முடியாத நிலையில் சிதைந்து போயிருந்தன!
சுற்று முற்றும் பார்த்தான் செரோக்கி; எங்காவது யஞ்சமா மரம் தென்படுகின்றதா என்று!
தூரத்தே ஓங்கி வளர்ந்த நெடுமரமொன்று தெரிந்தது. அது ஒரு யஞ்சமா மரமாகத்ததானிருக்க வேண்டும்!
விரைந்து சென்று அந்த நெடுமரத்தில் ஏறி பட்டை களையும் கனிகளையும் பிடுங்கியெடுத்தவன், கனிகளில் ஒன்றையுரித்து சவர்க்காரமாக உடம்பில் பூசிக் கொள்வதற்காக ரெங்க்மாவிடம் கொடுத்தான்! காட்டுவாசிகள் யஞ்சமா மரக் கனிகளைத்தான் உடம்பில் தேய்த்து நீராடுவர்!
தான் மரத்திலிருந்து கலட்டி எடுத்துவந்த பட்டைகளை நார்களினால் இணைத்து ரெங்க்மாவுக்கு அங்கவஸ்தியும் மார்க்கவசமும் செய்து அவள் நீராடிக்கொண்டிருந்த இடத்திற்கு அருகில் கற்பாறையொன்றில் வைத்துவிட்டு, தனக்கு அங்கவஸ்தி செய்வதற்காகப் பட்டைகள் பிடுங்குவதற்கு வேறோர் மரம் தேடி ஓடினான்!
அந்தி மெல்லச் சாய்ந்து கொண்டிருந்தது; இருவரும் நீராடிவிட்டு தமது புதிய அங்கவஸ்திகளை அணிந்து கொண்டு அருவியை விட்டும் வெளியேறினார்கள்.
பாசிபடிந்த கற்பாறைகளில் வழுக்கி விழுந்துவிடாதவாறு ரெங்க்மாவை செரோக்கி கைத்தாங்கலாக்கி தரைப் பகுதிக்குக் கொண்டுவந்து சேர்த்தான்!
“கரோனி” நதியிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் அருவி நீர் எப்போதும் அதிகுளிர்ச்சியாகவே காணப்படும். குளிர்ந்த நீர்க் குளிப்பால், ரெங்க்மாவின் உடம்பு நடுங்கியது!
மரத்திலிருந்து குதித்த மாமிச மலையைக் கண்டு துவண்டுபோய் செரோக்கியைக் கட்டிப் பிடித்ததில் கூச்சம்விட்டுப் போன ரெங்க்மா, அவனது அணைப்பை மேலும் வசீகரிக்கலானாள்! நடுங்கிக் கொண்டிருந்த அவளை இறுக்கி அணைத்தபடி அவளது உடம்பைச் சூடேற்றிக் கொண்டு மெல்ல நடந்தான் செரோக்கி!
வாழ்க்கையில் அவனுக்கு இதுவொரு புது அனுபவம்; புதியதொரு சுகமும் கூட! அந்த சுகத்தில் அவன் மனங்குளிர்ந்தான்!
அவனுக்குள் இணைந்து ஒன்றரக் கலந்து, தானும் புதிய தொரு சுகத்தை அனுபவித்தபடி மெல்ல நடந்து கொண்டிருந்த அவளும், அவனது அன்பையும் அதனோடு இணைந்த அரவணைப்பையும் இதயபூர்வமாக உணர்ந்து, மனப்பூர்வமாக ரசித்தாள்! வாழ்நாள் முழுவதும் அவனுடன் இணைத்துவிட வேண்டுமென்று உள்ளூரப் பிரார்த்தித்துக் கொண்டாள்!
தன் அன்பை அபகரித்துக் கொண்ட அவன், ஓங்கி வளர்ந்த யஞ்சமா மரத்தில் ஏறி பட்டை கலட்டி, அதனைத் தன் கைப்பட அங்கவஸ்தியாகவும், மார்க்கவசமாகவும் ஆக்கித் தந்தான். அவன் கரம்பட்ட பட்டைகள் தன் மாரை உரசிக்கொண்டிருப்பது அவனே தன்னை ஸ்பரிஸ்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வில் பரவசமடைந்தபடி அவள் நடந்து கொண்டிருந்தாள்!
ஜாகை போனதும் அவனது முதற்பரிசைக் கலட்டியெடுத்து, அவற்றுக்கு அழகாக வர்ணங்கள் பூசி, ஞாபகச்சின்னமாகப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்!
அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த முரட்டு மனிதன் விழுந்த குட்டையைப் பார்த்தார்கள். அங்கு அவனில்லை; அவன் விழுந்து கிடந்த அடையாளம் அழுகிப்போன குட்டையில் குழியாகிப் பதிந்திருந்தது!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments