முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி 'டிரம்ப்'பும், அவருக்கு எதிராகக் களமிறங்கும் தாமரைக்கன்னியும்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி 'டிரம்ப்'பும், அவருக்கு எதிராகக் களமிறங்கும் தாமரைக்கன்னியும்!


அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்  போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவர் திணறி, ஏடாகூடமாகப் பதில் கூறியதையடுத்து,  கட்சியில் பல தலைவர்கள் வேட்பாளரை மாற்ற போர்க்கொடி தூக்கியதால், போட்டியிலிருந்து விலகுவதாக பைடனே அறிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 19ம் தேதி சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக கட்சி மாநாட்டின்போது கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

இவ்வளவு காலமும், தான் ஒரு இந்தியர் என்று கூறி வந்த கமலா ஹாரிஸ் இப்போது தன்னை ஒரு கருப்பர் அடையாளப்படுத்தி வருகின்றார் என ட்ரம்ப் விமர்சனம் செய்து வருகின்றார்.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக 78 வயதான  ஜோ பைடன், பதவியேற்றவுடன், துணை ஜனாதிபதியாகிவிட்டவர்தான் இந்தக் கமலா ஹாரிஸ்.

பைடன்  ஜனாதிபதிப் போட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டதும், கடந்த 2024 ஆகஸ்ட் 2ம் திகதியன்று,  இவர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராவதற்குப் போதுமான பிரதிநிதி வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் சிலர் ஒரு பெண்ணாக இருப்பது அவரது ஜனாதிபதிப் பதவிக்கு ஒரு தடையாகக்கூட 
இருக்கலாம் என்றும், அமெரிக்காவிற்கு ஒரு பெண் ஜனாதிபதி என்ற புரட்சிகர சிந்தனைகளுக்குப் பின்னால் மக்களின் ஆதரவு இருக்கின்றதா, இல்லையா என்ற ஒரு கேள்விக் குறியும் இருப்பதாகக் கருத்து வெளியிடுகின்றனர். 


2016ம் ஆண்டு முதல் நான்கு  வருடங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக  இருந்த ட்ரம்ப், தனது ஆட்சியின்போது அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவராக இருந்தார்.  அமெரிக்காவின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்தும் மாறுபட்டு யோசித்து ஆட்சி செய்தவர்; தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவர். 

பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. அதனால் அவர்,1863க்குப் பின்னர் இத்தகைய நிகழ்ச்சியைப்  புறக்கணித்த முதலாவது பிரிந்து செல்லும் ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பெறுகின்றார். 

ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுவிட்டோம் என்பதை ஏற்க மறுத்த ட்ரம்ப், அவரது பதவிக்காலத்தில் இறுதி இரு வாரங்களை கௌரவம் பாதிக்கும் நிலையிலான  பயங்கர வன்முறைகளுடன் கழித்தார்.

பைடனின் வெற்றி அறிவிப்பு நிகழ்வின்போது, நாடாளுமன்றத்தில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை நடத்துவித்தார். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கு சற்றும் பொருந்தாத காரியத்தை செய்ததாக உலக அரங்கில் மானமிழக்கப்பட்டார்.

தானே வன்முறைகளைத் துண்டிவிட்டு, “வன்முறை அமெரிக்கர்களின் கௌரவத்தைப் பாதிக்கும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதிவு செய்யப்பட்ட யூடியூப் வீடியோ ஒன்றையும் பிரியாவிடை உரையாக  வெளியிட்டார்.  

பதவியேற்றது முதல் தனது பதவிக்கு முற்றிலும் பொருந்தாத சர்சைகளை உண்டு பண்ணக்கூடிய நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்த அவர், ஏழு நாடுகளின் இஸ்லாமியர் அமெரிக்காவிற்குள் வரகூடாது,  அவர்களுக்கு  வேலை வழங்கக் கூடாது, அமெரிக்காவுக்குள் வந்தவர்களில் பெற்றோரையும் பிள்ளைகளையும் பிரித்து வைக்க வேண்டும், பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டேன், உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதி வழங்க மாட்டேன்,  அமெரிக்காவுக்கும் மெக்சிகோவிக்குமிடையில் சுவர் எழுப்புவேன் என்பன என்பன போன்ற விதண்டாவாதக் கருத்துக்களை வெளியிட்டார்!

கொரோனா தொற்றால் அமெரிக்கா பாதித்த போது சுகாதாரத்துறை அதிகாரிகள் லாக்டவுனை அமுல்படுத்தக் கூறியபோதிலும் பொருளாதாரம் பாதித்துவிடும் என்பதற்காக அந்த ஆலோசனையை ஏற்க மறுத்து உலகிலேயே கொரோனா பாதிப்பின் முதல் நாடாக அமெரிக்காவை ஆக்கினார்.

நாட்டு மக்கள் கொரோனாவால் செத்து மடிந்து கொண்டிருந்த போது கூட  தனக்கே உரிய பாணியில் காமடித்தனமாகச் சிரித்து மருத்துவ நிபுணர்களை அதிர வைத்தார். தேர்தல் விவாதக்களத்திற்கு  'மாஸ்க்' அணியாமல் வந்து, பைடனுடன்  சர்ச்சையை ஏற்படுத்தினார்.


இத்தகைய முரண்பாடுகளின் மொத்த உருவமான டிரம்ப், கொஞ்சம் கூட நியாயமே இல்லாமல்  தோல்வியை ஏற்க மறுத்து, நீதிமன்றங்கள்  சென்றவேளை,  “ஆதாரம் எங்கே?” என்று நீதிபதிகள் கேட்டபோது முகத்தில் கரியைப் பூசிக்கொண்டபோதிலும்,  தான் தோல்வி அடைந்ததை சற்றும் உணராமல்  “பதவியிலிருந்து விலக மாட்டேன்” என கிறுக்குத்தனமாக நடந்து கொண்டார்.

பதவிமோகம்  வன்முறையை அரங்கேற்றும் அளவுக்கு அவரை எல்லை மீறிச் செல்ல வைத்தது.  ஆரம்பத்தில் காமடித்தனமாக  இருந்த இவர், போகப்போக இனவெறி, பதவிவெறி எனச்  செயல்பட்டதன் விளைவு,  மக்கள் அவரை  வெள்ளை மாளிகையின்  பின்புறக் கதவுவழியே துரத்தியடிக்கச் செய்துவிட்டது!

அமெரிக்கா என்றாலே முதலாளித்துவ நாடு, வல்லரசு நாடு என கெத்தாக இருந்த நிலையில் டிரம்பின் செயலால் சிறிய - வறிய  நாடுகள் கூட  அமெரிக்காவைப் பார்த்து எள்ளிநகையாடும் அளவுக்கு நடந்து கொண்டார்.

கிளர்ச்சிகளும், வன்முறைகளும் வளர்ந்துவரும் நாடுகளில் தேர்தல் காலங்களில்  இடம் பெறுகின்ற சாதாரண நிகழ்வுகளாகும். அதுவே அமெரிக்க போன்ற நாடுகளில் நிகழும் என்று எவரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்!

ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவைக் கீழ்மட்டம் நோக்கி நகர்த்திவிட்ட நிலையில்,  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கெப்பிடல் ஹில்லில்  அரங்கேற்றிய நாடகம் அமெரிக்காவை மேலும்  இழிநிலைக்குத் தள்ளிவிட்டது!

வாக்கெடுப்பில்  மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் குற்றச்சாட்டை முன் வைத்து வந்த நிலையில்,  ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது,  ஆதரவாளர்களுக்கு  மத்தியில் அவர்  உரையாற்றுகையில், “இந்தத் தேர்தல் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராகத் தற்காத்துக் கொள்வதற்கான இறுதி வாய்ப்பாகும்” என்றும்,  “தாராளவாத ஜனநாயகக்  கட்சியினர் செனட் சபையையும் வெள்ளை மாளிகையையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவார்களாயின்,  தான் அதற்கு எதிராகக் கடும் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும்” குறிப்பிட்டார்!

இந்நிலையில் சான்றளிப்புக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது  என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளை பேரணியொன்று  கெப்பிடல் ஹில் கட்டிடத் தொகுதியை  ஆக்கிரமிக்க வைத்து  கலவரத்தை ஏற்படுத்தினார்! 

இதனையடுத்து தலைநகரில் 2,700 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.  பிரதேசமெங்கும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இறுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டிடத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் தனது பணிகளைத் தொடங்க வாய்ப்பளித்தனர். 

கலவரத்தின்போது நால்வர் இறந்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் இருவர் இறந்ததைத்  தொடர்ந்து, எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.  இதன்போது 170 பேர் கைதுசெய்யப்பட்டு 70 பேருக்கு வழக்குத் தொடரப்பட்டது. புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டது!

வன்முறையைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசி வந்ததாலேயே கலவரம் வெடித்ததாகப் பலரும் குற்றம்சாட்டினர். டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் இந்த கலவரத்தை எதிர்த்ததுடன், பைடனின் வெற்றியையும்  ஆதரித்தனர். 


அதேவேளை பேரணிக்கு ஊக்கமளிக்கும் நோக்கிலும், ஜோ பைடன் குழுவை ஜனாதிபதியாகும் முயற்சியிலிருந்து விலகவைக்கும் எதிர்பார்ப்பிலும் ட்ராம்ப் சமூகவளைத்தலங்களிலும் தனது கருத்துக்களைப் பதிவிட்டார்!

அமெரிக்க மக்களினதும், அரசியல்வாதிகளினதும் பாதுகாப்புக் கருதி நாட்டின் நிலமை சீராகும்வரை காலவரையறையின்றி ட்ரம்பின்  “பேஸ்புக்”, “இன்ஸ்டகிராம்” மற்றும் “ட்விட்டர்” கணக்குகள் முடக்கப்பட்டன!

அமெரிக்காவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகவும், குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டுக்களுக்காகவும், வன்முறைகள் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்ததாகவும்  குற்றம் சுமத்தப்பட்டு டொனால்ட் ட்ரம்ப் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, 232 ஆதரவான வக்குகளாலும்  197 எதிர் வாக்குகளாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியது. 

ஜனாதிபதிப் பொறுப்புவகிக்கும் ஒருவர் மரணமடைந்தாலோ, உடல் அல்லது மனநலத் தகுதியை இழந்தாலோ அவரது அதிகாரத்தைத் துணை ஜனாதிபதிக்கு மாற்றுவதற்கு அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத் திருத்தம் வழி செய்கிறது.

'ஆபத்தானவர்' என்ற நிலையை அடைந்து, பதவியிலிருந்து விலக மறுக்கும் ஜனாதிபதியும் 25வது  சட்டத்திருத்தத்தின்படி பதவியிலிருந்து நீக்க பிரேரணை கொண்டுவர முடியும். 230 வருடகால அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டு முறைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுத்த ஒரே ஜனாதிபதி ட்ரம்ப் ஆவார்!

ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்பு அல்லது பதவி ஏற்பின்போது, ட்ரம்ப் வன்முறைகளைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பதவியேற்பு தினத்தின்போது 25,000 படை வீரர்கள் வாஷிங்டனில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

டொனால்ட் ட்ரம்பை 2024ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் நோக்கில்  காய் நகர்த்தல்களும் இடம்பெற்று வந்தன.  டொனால்ட் ட்ரம்பின் அடுத்த கட்ட விசாரணைக்கு  செனேட் சபையில்  56-44 பெரும்பான்மை வாக்குகளால் ஒப்புதல் கிடைத்த நிலையில், வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியேறிவிட்டதால், விசாரணை தேவையில்லை என்றவாறாக அவரைக் காப்பாற்ற நினைத்த தரப்பினர் அவ்வேளை  கருத்து வெளியிட்டனர்.

யாரிந்த டொனால்ட் ட்ரம்ப்?
1946ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி நியூயார்க் நகரத்தில் உள்ள குயின்ஸ் பகுதியில் கட்டுமான நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் நடாத்தி வந்த  ஃப்ரெட் ட்ரம்ப் என்பவருக்கும்  மேரி மெக்லியாட்டுக்கும் மகனாக பிறந்த டொனால்ட் ட்ரம்ப், சிறு வயது முதலேயே  அதீத உற்சாகமான குழந்தையாக வளர்க்கப்பட்டார்.

ட்ரம்பின் உற்சாகத்தை நெறிப்படுத்த எண்ணிய அவரது பெற்றோர்கள், அவரை 13வது  வயதில் ராணுவ பாடசாலையில்  சேர்ந்தனர். அங்கு அவர்  சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.

1968ம் ஆண்டு  பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரத்திற்கான இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது  தந்தையின் தொழிலைக் கவனிக்கத் தலைப்பட்டார். அதில் அவர்  வளர்ச்சி கண்டு,   1971ம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தின் முழு அதிகாரத்தையும் தன்கையில் எடுத்துக் கொண்டார்.  “எலிசபத் ட்ரம்ப் அன்ட் கோ” என்ற பெயரை “ட்ரம்ப் ஆர்கனைசேஷன்” என்று மாற்றிக் கொண்டார்.

1980ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள “தி கிராண்ட் ஹாயாட்” ஹோட்டலைப் புதிப்பித்ததன் மூலம் தொழில் முன்னோடி என்ற இடத்தைப் பிடித்தார். அப்போது அவர் எழுதிய  “ஆர்ட் ஆப் டீல்”என்ற நூல் உலகில் பெறும் வரவேற்பை பெற்றது.

பின்னர் சிலகாலம் ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய அவர்,  1987ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1999ம் ஆண்டு அதிலிருந்தும் வெளியேறி,  2001 வரை சீர்திருத்தக் கட்சியில் இணைந்து  ஜனாதிபதி  வேட்பாளராக போட்டியிட்டு, முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெறாததால் போட்டியிலிருந்தும் பின் வாங்கினார்.

அதனைத்  தொடர்ந்து ட்ரம்ப் தொலைகாட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் தொடங்கினார். என்பிசி தொலைகாட்சியில் அவர்  நடாத்திய “தி அப்ரிசியேஷன்” என்ற நிகழ்ச்சி உலகளவில் பாரிய  வெற்றி கண்டது.

வெற்றிகரமான தொழிலதிபாராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அறியப்பட்ட ட்ரம்ப், 2009ம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்தார். 

2015ம் ஆண்டு  ஜனாதிபதி  வேட்பாளராகப் போட்டியிட்டு,  ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து, அமெரிக்காவின்  45வது ஜனாதிபதியானார்.

உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க சண்டை நிகழ்ச்சிகளில் (WWE) கலந்து கொண்டுள்ள  டொனால்ட் ட்ரம்ப், அரச - ஆட்சி நிர்வாகத்தில் எந்தப் பதவியும் வகிக்காமல் ஜனாதிபதியான முதல் மனிதர்  என்ற பெருமையைப்  பெற்றுகொண்டார்.

இந்நிலையில், அவ்வேளை  டொனால்ட் ட்ரம்பின் மருமகள்களில் ஒருவரான, உளவியலில் பிஹெச்டி செய்துள்ள  55 வயதான மேரி எல். ட்ரம்ப் எழுதியிருக்கும் நூல் பெரும் புரளியை  உருவாக்கியது! 

அதற்குக் காரணம் அது அவரது குடும்ப உறுப்பினர் எழுதிய  வாழ்க்கை வரலாறு என்பதும்,  “உலகின் மிக அபாயகரமான மனிதனை எங்கள் குடும்பம் எப்படி உருவாக்கியது?” என்கின்ற உபதலைப்புமேயாகும்.

மேரி எல். ட்ரம்பின் “டூ மச் அண்ட் நெவர் இனஃப்: ஹவ் மை ஃபேமிலி கிரியேட்டட் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் டேன்ஜரஸ் மேன்?” என்ற நூலில் அவர் ட்ரம்பின் உண்மைத் தன்மையையும், அவர் பற்றிய வேறு சில இருண்ட பக்கங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.


தனது இந்திய அடையாளத்தை: "என் அம்மா ஷியாமளா 19 வயதில் தனியாக அமெரிக்காவிற்கு வந்தவர். அவர் ஒரு விஞ்ஞானி; ஒரு சிவில் உரிமை ஆர்வலர், தனது இரு மகள்களுக்கும் தன்னம்பிக்கையை விதைத்தவர்," என்று குறிப்பிடுகின்றார்.

கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் பிறந்துள்ள கமலாவின் தாய் இந்தியாவிலும், தந்தை ஜமைக்காவிலும் பிறந்துள்ளனர். கமலாவின் தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

கமலாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது ​​அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர்.

கமலாவை தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் வளர்த்தார். ஷியாமளா இந்தியா வரும்போதெல்லாம் அவருடன் கமலாவையும் கூட்டி வருவதுண்டாம்.

கமலா தனது சுயசரிதையான 'தி ட்ரூத் வி டோல்ட்’ இல் தனது பெயரின் அர்த்தத்தை தாமரை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜமைக்கா, இந்தியா மற்றும் அமெரிக்கா. இத்தகைய பல அடையாளங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமலா, அமெரிக்கர் என்று அழைக்கப்படுவதையே தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாகி, உலகின் 'பெஸ்ட் லேடி'யாகிவிடும் தனது இலக்கு நோக்கிப் பயணம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு, ட்ரம்ப் வழி விடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

செம்மைத்துளியான்




 



Post a Comment

Previous Post Next Post