Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-138


பாட்டி கூறி முடித்ததும் இருவரும் அடுப்பங்கரைக்குள் நுழைந்தார்கள். ஆனால் சின்னவள் வாய் மட்டும் சும்மா இல்லை.

“யாரா இருக்கும் அக்கா வருவது? அதுகும் விடைக்கோழி ஆக்கிப் போடும் அளவுக்கு பெரியவங்களா அவங்க? அதை சொன்னால் என்ன? யாரு வராங்கன்னு தெரிஞ்சா ஒரு நாளு பல்லும் கொட்டிடுமோ?” என்று சலித்துக் கொண்டே மூத்தவளிடம் கேட்டாள்.

உடனே மூத்தவள், “அடி பாவி! அப்போ உனக்கு யாரு அவங்கன்னு தெரிஞ்சா போதுமா?” என்று சிரித்தாள்.

சின்னவள் உடனே சற்று அடங்கிய குரலில், “சரி சரி… ஆத்திரத்தில் சொல்லிட்டேன். பெருசு பண்ணாதே அக்கா. ஆனா உண்மையா சொல்லு… நம்ம மாமியாரு சொன்னா என்னவாம்? எனக்கு தெரியாம இருந்தா தலையே வெடிச்சிடும் போல இருக்கு. சமைக்குறதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சே ஆகணும். என்ன வழி சொல்லு அக்கா…” என்று அவளருகே நின்று நச்சரித்தாள்.

“அய்யய்யோ… இவ தொல்லை தாங்க முடியல…” என்று மூத்தவள் தலையசைத்துக் கொண்டே, “போய் வாழைப்பூ அறுத்துட்டு வா. புளித்தண்ணீரில் ஊற வைச்சிட்டு அடுத்த வேலை பாரு,” என்று கத்தியை அவளிடம் கொடுத்தாள்.

சின்னவள் வாய்க்குள்ளே முணுமுணுத்தாள், “என்ன பெரிய மலை பிளக்கும் வேலைன்னு நினைக்கிறாங்க…” என்று சொல்லிக் கொண்டே வெளியேறினாள்.

கொல்லைப்புறத்தில் இருந்த வாழைப்பூவை அறுத்து வந்து கொண்டிருந்தாள். அப்போது கிழவி, “இந்தா மருமகளே, நான் சின்னதா நறுக்கித் தர்றேன். நீ போய் உப்பு, புளி போட்டு நிறைய தண்ணீர் எடுத்து வா. வேற வேலையிருந்தா பாரு,” என்று கூறி வாழைப்பூவை வாங்கிக் கொண்டார்.

“சரி அத்தை,” என்று தலையசைத்து சின்னவள் உள்ளே சென்றாள்.

அவள் அடுப்பங்கரைக்குள் நுழைந்தவுடன் மீண்டும் புறுபுறுத்தாள். “பெரிய வேலைன்னு நினைச்சாங்க போல… இப்போ அத்தை தான் உதவுறாங்க…”
அப்போது சமையல் வாசனையால் கவரப்பட்டு மேரி அக்கா உள்ளே வந்தார்.

“என்னங்கடி… கமகமன்னு வாசம் தூக்குது! என்னதான் சமைக்கிறீங்க? விருந்தா என்ன?” என்று கேட்டபடி நீரை அள்ளிக் குடித்தார்.

மூத்தவள் சிரித்தபடி, “ஆமாம் அக்கா…” என்றாள்.

உடனே சின்னவள் இடையூறாக, “இஞ்ச பாரு மேரியக்கா… யாரு வராங்கன்னு கேட்காதே. நான் கடுப்பாகிடுவேன்,” என்றாள்.

மேரி அக்கா சிரித்துக் கொண்டே, “என்னடி வம்பு இது? யாரு வர்றாங்கன்னு கேட்கிறது ஒரு குற்றமா? நான் கேட்குறதுக்கு முன்னாடியே இவள் பாய்கிறாள் பாரு,” என்றார்.

மூத்தவள் மெதுவாக சிரித்தபடி, “அக்கா அவளுக்கே தெரியாது. அத்தை கூட சொல்லல. அதனாலதான் சின்னவள் இப்படி புலம்புறா,” என்றாள்.
“அடியாத்தி… அப்போ யாராக இருக்கும்?” என்று மேரிக்குள்ளும் ஆர்வம் எழுந்தது.

மூவருக்கும் பதில் தெரியவில்லை… பாட்டி சொல்லும் வரை அந்த கேள்வி மட்டும் காற்றில் தொங்கியது.

(தொடரும்)

 


Post a Comment

1 Comments