Ticker

6/recent/ticker-posts

கலா சமையல்


மரவள்ளி கோதுமை மோதகம்  (பாரம்பரிய சுவையுடன் கூடிய இனிப்பு மோதகம்)

மரவள்ளிக் கிழங்கின் மென்மையும், கோதுமை மாவின் சத்தும், தேங்காய்–பயறு இனிப்பின் சுவையும் இணைந்து தரும் இந்த மோதகம், எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகும்.

தேவையான பொருட்கள்

நன்றாக வேகக்கூடிய மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோ
கோதுமை மா – 1 கிலோ
தேங்காய் – 1 (தேங்காய்ப் பூ)
கறுப்பு மிளகு – 10
வறுத்து சுத்தம் செய்த பயறு – 25 கிராம்
சீனி அல்லது வெல்லம் – 50 கிராம்
உப்பு – சிறிதளவு
(இனிப்பு அதிகம் விரும்புவோர் கூடுதலாக சீனி சேர்த்துக் கொள்ளலாம்.)
செய்முறை

முதலில் மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

சூடாக இருக்கும் போதே அதன் நடுவிலுள்ள நார்களை நீக்கி, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கூழ் போல் மசித்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, கோதுமை மாவையும் கலந்து மோதகம் செய்யும் பதத்திற்கு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பூரணம் தயாரிக்கும் முறை

தேங்காய்ப் பூ, ஊற வைத்த பயறு, சீனி அல்லது வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் வற்றும் வரை கிளறவும்.

இறுதியாக கறுப்பு மிளகை பொடி செய்து சேர்த்து நன்றாகக் கலந்து, ஆற விடவும்.

மோதகம் செய்யும் முறை

பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டி அதன் உள்ளே தயாரித்த பூரணத்தை வைத்து மூடி உருண்டை வடிவில் செய்யவும்.

மாவு வெடிப்பு இல்லாமல் நன்றாக மூடியிருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

நீர் நன்றாகக் கொதித்ததும் மோதகங்களை ஒன்றன் பின் ஒன்றாக இடவும். ஒவ்வொரு மோதகத்துக்கும் இடையில் சிறிது நேர இடைவெளி விடவும்.

ஒரே நேரத்தில் அதிகமாகப் போடாமல் சுமார் 10 உருண்டைகள் வரை போடலாம்.

25 நிமிடங்கள் கழித்தே மெதுவாக கரண்டியால் திருப்பி விடவும். உடனே திருப்பினால் ஒட்டி உடைந்து போகும்.

சுமார் 40 நிமிடங்கள் கழித்து எடுத்து ஆற விடவும்.

சுவையான மரவள்ளி கோதுமை மோதகம் தயார்!

இது உடனடியாகத் தயாரிக்கக்கூடிய, சுவையும் சத்தும் நிறைந்த இனிப்பு வகையாகும்.

ஆர் எஸ் கலா

 


Post a Comment

1 Comments

  1. நன்றிகள் அண்ணா

    ReplyDelete